கூட்டுறவு வங்கியில் 412 பவுன் நகை கொள்ளையில் திடீர் திருப்பம்: பெண் செயலாளரே கொள்ளையடித்துவிட்டு நாடகமாடியது அம்பலம் 150 பவுன் நகைகள் மீட்பு

Share this :
No comments

ராமநாதபுரம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் 412 பவுன் நகைகள் கொள்ளைபோன சம்பவத்தில் திடீர் திருப்பமாக, பெண் செயலாளரே கொள்ளையடித்துவிட்டு நாடகமாடியது போலீஸ் விசாரணையில் அம்பலமானது. அவரிடம் இருந்து 150 பவுன் நகைகளை போலீசார் மீட்டனர். 412 பவுன் கொள்ளை ராமநாதபுரம் அருகே உள்ள தொருவளூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் செயலாளராக வேலைபார்த்து வருபவர் கஸ்தூரி. இவரை நேற்று முன்தினம் ஹெல்மெட் அணிந்துவந்த 2 மர்ம வாலிபர்கள் கட்டிப்போட்டு 412 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றுவிட்டதாக கூறப்பட்டது. போலீசார் நகைகள் கொள்ளைபோனது எப்படி? என்று கஸ்தூரியிடம் துருவித் துருவி விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின்போது கஸ்தூரி முன்னுக்குப்பின் முரணான தகவல்களை கூறினார். இதனால் கஸ்தூரியின் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் போலீசாரின் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் அவர் திணறியதோடு போலீசாரையே மிரட்டினார். பெண் செயலாளரின் நாடகம் போலீசார் சாமர்த்தியமாக விசாரணை நடத்தியதில், அவரே திட்டமிட்டு நகைகளை கொள்ளையடித்துவிட்டு, நாடகமாடிய திடுக்கிடும் தகவல் தெரியவந்தது. இதுபற்றிய விவரம் வருமாறு:– இந்த கூட்டுறவு கடன் சங்கத்தில் நகைகள் உள்ள லாக்கருக்கான 2 சாவிகளில் ஒன்று சங்கத்தின் தலைவி தமயந்தியிடமும், மற்றொன்று செயலாளரான கஸ்தூரியிடமும் உள்ளன. இரண்டு சாவிகளும் இருந்தால் தான் லாக்கரை திறக்கமுடியும். தமயந்தி தன் மகளுக்கு உடல்நிலை சரியில்லாததால் சென்னை செல்வதாகவும், நகையை மீட்பதற்கு யாராவது வந்தால் எடுத்துக் கொடுக்கும்படி தனது சாவியை கஸ்தூரியிடம் கொடுத்தார். கொள்ளையடிக்க திட்டம் இரண்டு சாவிகளும் தன்னிடம் இருந்ததால் கஸ்தூரி சில நாட்களுக்கு முன்னர் லாக்கரை திறந்து பார்த்தார். அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த நகைகளை கண்டதும் அவருக்கு ஆசை ஏற்பட்டது. சில நாட்களுக்கு முன் லாக்கரில் இருந்து சுமார் 150 பவுன் நகைகளை திருடிச்சென்று தனது வீட்டின் பரண்மேல் வைத்தார். எஞ்சிய நகைகளையும் முழுமையாக கொள்ளையடித்து சந்தோஷமாக வாழ வேண்டும் என்று நினைத்தார். தனது எண்ணத்தை மாமா மகனான மதுரையைச் சேர்ந்த காளிதாசிடம் கூறினார். அவர் இதுகுறித்து தன் நண்பரான தேனியை சேர்ந்த பரமகுருநாதனிடம் கூறினார். அவர்கள் 3 பேரும் சேர்ந்து நகைகளை கொள்ளையடிக்க திட்டமிட்டனர். நாடகம் அம்பலம் இவர்களின் திட்டப்படி நேற்று முன்தினம் மதியம் 2 மணிக்கு கஸ்தூரி அலுவலகத்திற்கு வந்தார். சிறிது நேரத்தில் காளிதாசும், பரமகுருநாதனும் மோட்டார் சைக்கிளில் வந்தனர். இவர்கள் 3 பேரும் சேர்ந்து லாக்கரை திறந்து அதில் மீதம் இருந்த நகைகளை எடுத்துக்கொண்டு, போலீசாருக்கு சந்தேகம் வராதபடி சில நகைகளை அங்கொன்றும் இங்கொன்றுமாக சிதறிவிட்டனர். கஸ்தூரியின் காலிலும், வாயிலும் பிளாஸ்திரியை ஒட்டிவிட்டு, கதவையும் பூட்டிவிட்டு நகைகளுடன் தப்பிச்சென்றனர். வெகுநேரமாக அலுவலகத்திற்குள் யாரும் வராததால், கஸ்தூரி வேறு வழியின்றி நகர்ந்துவந்து கதவை காலால் தட்டினார். சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினரிடம் கொள்ளை நடந்ததாக நாடகமாடியது போலீஸ் விசாரணையில் அம்பலமானது. 150 பவுன் மீட்பு கஸ்தூரி தனது 2 மகள்களை திருமணம் செய்து கொடுத்துவிட்டார். ஒரே மகன் சென்னையில் உயர்கல்வி படித்து வருகிறார். போலீசார் அவரிடம் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். கஸ்தூரி கொடுத்த தகவலின்பேரில் அவரது வீட்டு பரண் மேல் வைக்கப்பட்டிருந்த 150 பவுன் நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். வங்கியில் சிதறிக்கிடந்த 263 கிராம் நகைகளையும் போலீசார் கைப்பற்றினர். இதில் தொடர்புடைய காளிதாஸ், பரமகுருநாதன் ஆகியோரை தனிப்படையினர் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

No comments :

Post a Comment