அதிமுகவின் தேன் தடவிய வாக்குறுதி: ராமதாஸ் காட்டம்

Share this :
No comments


தமிழக முதல்வராக நேற்று மீண்டும் பதவியேற்ற ஜெயலலிதா வீடுகளுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்குவதாக அறிவித்தார். இது மக்களை ஏமாற்றும் வேலை எனவும், அதிமுகவின் தேன் தடவிய வாக்குறுதிகளை நம்ப வேண்டாம் எனவும் பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், ஜெயலலிதாவின் இந்த அறிவிப்பால் 1.11 கோடி நுகர்வோருக்கு சொல்லிக் கொள்ளும்படியாக எந்த பயனும் ஏற்படாது. இந்த அறிவிப்பு மக்களை ஏமாற்றும் செயலாகவே அமையும்.

ஒரு வீட்டில் 100 யூனிட்டுக்கு மேல் மின்சாரம் உபயோகித்தால் அதில் 100 யூனிட்டை கழித்து விட்ட மீதமுள்ளவற்றுக்கு கட்டணம் வசூலிக்க வேண்டும், ஆனால் அதிமுக அரசு பிறப்பித்துள்ள ஆணை இதற்கு நேர்மாறாக அமைந்திருக்கிறது.

ஒரு வீட்டில் இரு மாதங்களுக்கு 200 யூனிட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டால் இலவச மின்சாரத் திட்டத்தின்படி 100 யூனிட் கழித்து மீதமுள்ள 100 யூனிட்களுக்கு ரூ.120 மட்டுமே கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும். ஆனால், இப்போது ரூ. 233 வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இரு மாதங்களுக்கு 400 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்துவோருக்கு இப்போது ரூ.1030 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இலவச மின்சாரத்திட்டத்தின்படி இது 300 யூனிட் கட்டணமான ரூ.730 ஆக குறைக்கப்படவேண்டும்; ஆனால் இது ரூ.830 ஆக மட்டுமே குறைக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதனால் 100 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்தும் 1.11 கோடி வீடுகளுக்கு பெரிய பயன் கிடைக்காது.

வறுமையில் வாடும் குடும்பங்களுக்கு ஏற்கெனவே இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வரும் நிலையில், வாக்குவங்கியை குறிவைத்து கோடீஸ்வரர்களுக்கும் இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தில் பாமகவுக்கு உடன்பாடு இல்லை.

100 யூனிட் இலவச மின்சாரம் வழங்குவதாக அறிவித்துவிட்டு, அதை முறையாக வழங்காமல் 1.11 கோடி குடும்பங்களை ஏமாற்றுவது கண்டிக்கத்தக்கது. அதிமுகவின் தேன் தடவிய வாக்குறுதிகளை நம்பி ஏமாறாமல் தமிழக மக்கள் இனியாவது விழிப்புணர்வு பெற வேண்டும் என ராமதாஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

No comments :

Post a Comment